Sunday 14 April 2013

// // Leave a Comment

நான் கமல் ரசிகன்

 காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு நடிகர், திரைத்துறைக் கலைஞர் என்ற விதத்தில் அவரது ரசிகனாகவே இருக்கிறேன்.

ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?


கமலின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் அது அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து என்று தோன்றுகிறது. அபூர்வ சகோதரர்களில் குள்ளமாக நடித்ததைப் பார்த்த பொழுது "எப்படிக் குள்ளமாக நடிக்க முடியும்" என்றெல்லாம் யோசித்ததுண்டு. அப்படியே.. சானக்யன், வெற்றிவிழா, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், குணா என்று ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள். ஒன்று ஒப்பனைகளில் மாற்றம், அல்லது கதையமைப்புகளில் மாற்றம் அல்லது வட்டார வழக்கில் மாற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம்..நல்ல படங்களின் மீதான் ரசனையை வளர்த்தது கமல், படங்கள் தான்!!

எத்தனையோ முறை சக நண்பர்களின் (கமல் ரசிகன் என்பதால்) எள்ளலிற்கு உள்ளாகியிருக்கிறேன்.நண்பர்களை பொறுத்த மட்டிலும் நல்ல படங்கள் எனில், நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் படங்களில் நிறைய பாட்டுகள், சண்டைகள், என்ற மசாலாவாக இருக்க வேண்டும் என்பதும் கமலின் பெரும்பாலான படங்கள் இத்தன்மை இல்லாததும் விளங்க ஆரம்பித்தது.ஏன் கமல் படங்களில் சண்டைகள் வருவதில்லை என்றேல்லாம் யோசித்ததுண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 


2007,08ம் ஆண்டுகளில் கமலின் பழைய படங்களுக்கும் அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது. சலங்கை ஒலி, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, சிப்பிக்குள் முத்து, மூன்றாம் பிறை, பேசும்படம் என்றெல்லாம் படங்களைப் பார்த்த பொழுது தரமான படங்கள் பலவற்றுள் நடித்து வந்திருப்பதும் தரமான இயக்குனர்கள் தங்களின் தரமான படங்களில் கமலை நடிக்க வைத்திருப்பதும் கவனித்தேன். இதனால் கமல் படங்களின் மீதும் தரமான படங்களின் மீதும் ரசிப்பு மேலும் அதிகரித்தது. அந்த ரசனை கமல் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நல்ல படங்களையும் பாராட்டும் பக்குவத்தை ஏற்படுத்தியது.

இப்படி கமல் ரசிகர்களும், தரமான படங்களின் ரசிகர்களும் கமல் படங்களையும், தமிழ்த் திரையுலகிற்கு கமலின் பங்கையும் புகழும் பொழுது, "கமல் நடித்த படங்கள் எல்லாம் உலக சினிமாக்களின் காப்பி தான். அவர் ஒரு காப்பி நடிகர் மட்டுமே. ரசிகர்கள் வியந்து போற்றுவதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை" என்ற கருத்தை வலைப்பூக்களின் பார்க்கும் பொழுது, அதற்குக் "கமல் ரசிகன்" என்ற முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமலின் தரமான படங்கள் என்று சொல்லப்படும் நாயகன், தேவர்மகன், மகாநதி, குணா, சத்யா, ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களெல்லாம் ஆங்கிலப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. நகைச்சுவைக்குப் பெயர் போன சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் போன்ற படங்களும் சுடப்பட்டவை என்று கூறப்படுகிறது. 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு Product Creation பற்றி சில கருத்துகள்..

ரு பொருளை (Product) உருவாக்குவதற்கு முன்பு அப்பொருள் எந்த சந்தையில்(Market) வெளியிடப் போகிறோம், அச்சந்தையின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் (Demographics), அந்த சந்தையில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் உள்ளன (Market Survey), அச்சந்தையின் தேவை என்ன ( Market Needs), பொருளைச் சந்தைப்படுத்தும் பொழுது எப்படி மாறுபடுத்தப் போகிறோம் ( Product Differentiation) என்றெல்லாம் ஆராய்ந்து, பொருளைத் அம்மக்களிற்கு ஏற்ப வடிவமைத்து (Localisation / Customization) சந்தைப்படுத்த வேண்டும். சந்தையில் வெளியிடப்போகும் பொருள் தன் ஆராய்ச்சியின் மூலம் வந்த பொருளாகவோ, ஏற்கனவே வெளியான பொருளின் சில பல மாறுதல்களுக்கு உட்பட்ட பொருளாகவோ இருக்கலாம். இதை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது வாடிக்கையாளர்க்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் ( User Experience) தரப்போகிறோம் என்பதே!! கமலின் படங்கள் உலகப்படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றாலும் தமிழ்ச் சந்தைக்குத் தேவையான மாற்றங்களுடன் மண்வாசனையுடனேயே வந்துள்ளன.

தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நமது மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தான் பார்க்க முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பங்காளிச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும் மண்வாசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. மகாநதியைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளம் கொதிக்கச் செய்தது தான் படத்தின் வெற்றியே. எங்கோ ஆங்கிலேய நாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து சுடப்பட்டது என்று கூறப்பட்டாலும், கும்பகோணத்தையும் கல்கத்தாவையும் முடிச்சுப் போட வைத்தது தான் மகாநதி குழுவின் வெற்றியே. விருமாண்டியை ரசித்த அளவிற்கு நம் மண்ணில் புதைந்திருக்கும் குரோத உணர்வை நினைத்து வெட்கப்பட்டது மனம். அது தான் படத்தின் வெற்றியே!! காப்பியடிக்கப் பட்டதாகக் கூறப்படும் படங்களை இன்று பார்த்தாலும் எனக்கு என் மண்ணில் நடக்கும் விசயமாகப்படுகிறதே ஒழிய அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ நடப்பதாகப் படவில்லை.

அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்களில் வெளிப்படுத்திய கருத்துகளுள் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும் தெரிந்தாலும் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்று அடுத்த தலைமுறையினர்க்கு நம்பிக்கை கொடுத்தது. குருதிப்புனலை ஹிந்தியில் இருந்து காப்பியடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருப்பார்கள். குருதிப்புனல் தான் தமிழில் வெளியான முதல் "டால்பி" ஒலியமைப்பில் வெளியான சினிமா. தமிழகத் திரைத்துறையினரை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தியதில் பெரும்பங்கு கமல் படங்களுக்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை, கதையமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் புதிய விசயங்களைக் கொண்டுவந்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு. இங்கும் ஒரு பன்மொழிப் படத்தை எடுக்க முடியும் என்று காட்டியதில் ஹேராமிற்குப் பெரும் பங்குண்டு. இப்படம் தோல்வியுற்றதற்கான காரணமும் இதுவே. 

கமலின் பரிட்சார்த்தமான படங்கள் பலவும் சொந்தத் தயாரிப்பில் வந்த படங்களே. மாற்றுப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தெரிந்திருந்தாலும் கமல் எடுத்ததற்கான காரணம், புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதற்குக் காப்பி தான் அடிக்க வேண்டுமா? என்றால், இப்படி ஒரு கதைக்கருவில் தமிழ் ரசிகர்களுக்குப் படம் கொடுக்க விருப்பப்பட்டிருக்கலாம். "மண்வாசனையுடன்" எடுக்கப்பட்ட படங்களை ஈயடிச்சான், கொசுவடிச்சான் காப்பி என்பதெல்லாம் ஓவர். 

தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!

கமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை எதற்காக அதிகரிக்க வேண்டும்? சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை போன்ற படங்களையே எடுத்துக்கொண்டிருந்திருக்கலாமே!! அப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சூர்யா, விக்ரம் போன்று நடிப்பில் முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களும் பருத்திவீரன், பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களும் வருவதற்கு நாளாகியிருக்கும்!! கமல் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. அவர் செய்திருப்பது ஒரு Initiation ஆரம்பம்.

ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். "நாங்கள் தான் இணையத்தில் இருந்து தரவிறக்கி உலகசினிமா ரசனையை அதிகரித்துக்கொள்கிறோமே, கமல் தான் ரசிகர்களின் ரசனையை அதிகரிக்க வேண்டுமா?" ஐயா படங்களைத் தரவிறக்கம் செய்யுமளவிற்கு இணைய வசதியும் கிடைக்கப் பெற்றோர் ஒரு சதவிதத்தினர் தான். மற்றவர்களை அந்த தரத்திற்குக் கொண்டு வர வேண்டாமா? அதைத் தான் மகேந்திரன்,பாலுமகேந்திரா, பாலசந்தர்,பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் செய்துள்ளனரே. ஏன் கமல் மெனக்கெட வேண்டும்? அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வீச்சு அதிகம் என்பதே என் கருத்து!! உலக சினிமாவை நோக்கி வந்திருக்கும் பலரும் சிறு வயதில் கமல் படங்களைச் சிலாகித்தவர்களாகவே இருப்பர்.

கமலிற்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறாயே.. கமல் இன்னும் நம் சமுதாயத்தில் உள்ள ஏகப்பட்ட விசயங்களைப் படமாக்கியிருக்கலாமே!! ஆம்.. எனக்கும் அந்த வருத்தம் உண்டு. கமல் எடுக்க வேண்டிய, ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரங்கள், பேச வேண்டிய சமுதாயக் கருத்துகளும் நிறைய உள்ளன. கமலிற்கு மனமும் பணமும் இல்லாத பட்சத்தில், அதை விக்ரம்களும், சூர்யாக்களும், சேரன்களும்,பாலாக்களும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி மாற்று சினிமாவை எடுப்பதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு!! 

அதனால், காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை!!

0 comments:

Post a Comment