Friday 15 March 2013

// // 5 comments

என்னது காமிக்சா ??

புதையலைத் தேடிக் கிளம்பிய அவர்கள் வழியில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதுவரை யாருமே பயணம் செய்திராத பாதையில் பயணம் செய்யும் தைரியம் கொண்டு முன்னேறிச் சென்ற அவர்களை எதிர்நோக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆபத்துகள் காத்துக் கிடந்தன. ஆள்விழுங்கி ஏரிகள், பயங்கரப் பிராணிகள், காற்றும் புக முடியாத அடர்கானகம், நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் என்று எக்கச்சக்க தடங்கல்கள். அதை எல்லாவற்றையும் முறியடித்து அவர்கள் புதையல் பாதையின் இறுதியை நெருங்கி விட்டார்கள். அங்கே..

நிற்க.. மேலே இருக்கும் வாசகங்களைப் படிக்கும்போது ஏதேனும் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது எனில்.. சந்தோஷமாக உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். என் இனமய்யா நீர். என்னது காமிக்சா? அது சின்ன பிள்ளைங்க படிக்குறதாச்சே என்று சொல்லக்கூடியவர் என்றால் இப்படியே ஜகா வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான இடுகையல்ல..




அழகான படங்களோடும் மிக நுண்ணிய தகவல்களோடும் வரும் காமிக்ஸின் சித்திரக்கதைகள் நம் மனதை எளிதில் கொள்ளை கொண்டு விடக்கூடியவை. ஒரு அறை என்பது இப்படி இருந்தது என்று பக்கம் பக்கமாக வார்த்தைகளில் விளக்குவதை விட ஒரு படத்தின் மூலம் எளிதாக சொல்லி விடலாம். பார்க்கப்போனால் காமிக்ஸ்தான் இன்றைய திரைப்படங்களுக்கான முன்னோடி என்றுகூட சொல்லலாம். லாங்ஷாட், க்ளோசப் என்று ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஆரம்ப முயற்சிகளை எல்லாம் முதலில் செய்து காண்பித்தது காமிக்ஸ்தான்.

காமிக்ஸ் வாசிப்பது ஒரு அற்புத அனுபவம். வாசிக்கும் நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றி உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் அந்தப் புத்தகங்களுக்கு உண்டு. அந்தப் புத்தகங்களை வாசிக்கும் தருணங்களில் விரைந்தோடும் குதிரைகளில் நாயகர்களோடு ஒருவனாக நானும் பயணித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவியாய் மாறி அரூப வடிவில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை டுமீல் டுமீல் என சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஸ்பைடரின் வலையில் தலைகீழாகத் தொங்கியுமிருக்கிறேன்.

கொலராடோ நதியும் செவ்விந்தியர்களும் ஏதோ நமக்கு வெகு அருகாமையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை காமிக்ஸ்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன. எனக்கு அறிமுகமாயிராத முற்றிலும் புதிய உலகங்களையும் காமிக்ஸ்களின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அஸ்டெக் என்றொரு இனம் இருக்கிறது, அவர்கள் சூரியக்கடவுளை வழிபடுவார்கள் என்பதில் ஆரம்பித்து கவுபாய்களின் உலகம் எப்படியிருக்கும் என்பது வரை காமிக்ஸ்கள் பல தகவல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. 

விவரம் தெரிந்து நான் முதல்முதலில் காமிக்ஸ் வாசித்த தினம் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.அன்று ஆரம்பித்த காமிக்ஸ் மீதான என்னுடைய ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் என் நினைவுகளின் பேழையிலிருந்து இப்போது மீட்டெடுத்துப் பேசுவதற்கான அவசியம்.... இருக்கிறது. ஏனெனில் நான் வாசித்த காமிக்ஸ் பற்றியும் அலட்டப்போறேன்

சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்த "வெற்றி விழா" என்றொரு படம் வெளியானது உங்கள் நினைவிலிருக்கலாம். அது இந்த காமிக்ஸ் தொடரைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதே. இரத்தப்படலத்தின் மூலக்கதை என்ன? கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் "இரத்தப்படலம்". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா? மொத்தம் பதினெட்டு பாகங்கள் உடைய கதை. இதுவரை பத்து பாகங்கள் மட்டுமே லயனில் வெளிவந்து இருந்தன. ஆனால் இப்போது எல்லாப் பாகங்களையும் இணைத்து ஒரு ராட்சத இதழாக இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது.


கமிக்ஸினால் எனக்கு ஏற்பட்ட எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. அடுத்த இடுகையில்..




5 comments: