Tuesday 3 May 2016

// // 2 comments

”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்கள்”- புத்தக விமர்சனம்


புதுடெல்லியில் பிறந்து லக்னோவில் வளர்ந்தவரான பத்திரிகையாளர் பாஷாசிங் எழுதிய ”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபோது இன்னும் நாகரீகமடையாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. காஷ்மீர், புதுடெல்லி, பீகார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து மலம் அள்ளும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வாழ்வியலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்கை தவிர, அடைவதற்கு ஒரு பொன்னுலகம் உண்டு என்பார்கள். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் தொழிலை ஒழிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கென்று பெரிய அளவிலான பொருளாதார வசதி எதுவுமில்லை. ஆனால் மனிதனாய் வாழ வேண்டும் என்பது மட்டும் இவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கையால் மலம் அள்ளும் கொடூரமான நடைமுறை வழக்கம் இருந்து வருகிறது. பெரும்பாலும் அவர்களின் கூலியாக சிறு ரொட்டி துண்டு தான் கிடைக்கும். அதுவும் பின்வாசல் வழியாகவே பெற வேண்டும். ஆனால், மனிதனை மனிதாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்த கொடுமையை ஒழித்து கட்டுவதற்கு பதிலாக அப்படியொரு நடைமுறையே இல்லை என மூடி மறைப்பதிலேயே அரசுகள் தங்கள் நேரம் முழுவதையும் செலவழிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என கூறிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளம் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. எங்கு பார்த்தாலும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை ஒரு கையில் ஏந்திய நிலையிலும், மறு கையை நீட்டியபடியும் தான் அம்பேத்கரின் சிலை உள்ளது. நாம் சென்றடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பதையே இந்த விரல் சுட்டிக்காட்டுகிறது என்று தான் அந்த மக்கள் புரிந்து கொள்கின்றார்கள். நமக்கென்று போராட யாருமில்லை. நம்மை மீட்க எந்த கடவுளும் வரமாட்டார் என்பது அந்த மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

சட்டங்கள் இயற்றுவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது. நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் கூட குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் பள்ளிக்கூடங்களில் கழிப்பிடங்களை கழுவ இந்த குழந்தைகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கல்வி ஆலயங்கள் என கொண்டாடப்படும் பள்ளிக்கூடங்களில் இக்குழந்தைகளுக்கு இதுபோன்ற சாதியத்தளைகளிலிருந்து விடுபடும் வழிவகைகளை சொல்லித்தருவதற்கு பதிலாக, மலம் அள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். “சாதியை வைத்து ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஆவதில்லை” மனிதர்கள் எல்லோரும் சரிநிகர் சமமானவர்களே என்ற மகாத்மா காந்தியின் வாசகங்களை பள்ளி ஆசிரியர் உரக்க வாசித்த போது, குறுக்கிட்ட மாணவி ஒருவர் பொய். இதெல்லாம் பொய். இல்லையென்றால் என்னை மட்டும் ஏன் கழிப்பிடம் சுத்தம் செய்ய அனுப்புகிறீர்கள்? என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்த மாணவியை ஆசிரியர் கடுமையாக தாக்கினார். அத்துடன் அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லவே இல்லை. ஆன்மீகத்தின் காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மலம் அள்ளும் தொழிலை செய்வதாக கூறிய நரேந்திர மோடியை “நீங்கள் மலம் சுமந்து பாருங்கள். ஏதாவது ஆன்மீகத்தன்மையை உணருகிறீர்களா என பார்ப்போம் என்று மோடிக்கு சவால் விடுத்தனர் அந்த சாதி மக்கள்.

உயர் சாதியினரும், மேட்டுக்குடியினருமே அரசியலை ஆக்கிரமித்துள்ளதால் மலம் அள்ளும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. மலம் அள்ளும் சமுதாயத்தினர் வாழும் இந்த உலகம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட புலனுக்கு தென்படாத பிரதேசம். இந்த இந்தியாவை வெளியில் தெரியாதபடி மறைக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். தன் அம்மா கழிப்பிடங்களை சுத்தம் செய்கிறார் என கூறிக்கொள்வதில் எந்த குழந்தைக்கும் பெருமை இருக்காது. எனவே, குழந்தைகளே தாயை ஒதுக்கி வைக்கும் நிலையை இந்த சமூக மக்கள் அனுபவிக்கின்றனர்.

நாம் செய்யும் இந்த வேலை ஒரு தரும காரியம். அதை செய்வதற்காக மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் அந்த சமூகத்தினர் பெரும்பாலானோரின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது. அந்த எண்ணத்தை உருவாக்கியது தான் ஆதிக்க சாதியின் வெற்றி. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹெலா என்ற முஸ்லீம் பிரிவை சேர்ந்த பெண்களின் தோள்களில் தான் மலம் அள்ளும் பாரம் ஏற்றி வைக்கப்படுகிறது. முஸ்லீம்களிடையே தீண்டாமை கிடையாது என கூறப்பட்டாலும் ஹெலா சமுதாயத்தை சேர்ந்த பெண்களும், அவர்களின் குழந்தைகளும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்படுகின்றனர். மதரசாக்கள், மசூதிகள் என எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் நிலவுகின்றன. மயானங்கள் கூட வேறானவை.

இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி கழிப்பிடங்களை சுத்தம் செய்வது யாரென்று மூன்றாம் நபருக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்த பெண்கள் முக்காடிட்டு முகத்தை மறைத்துக் கொள்கின்றனர். பலர் தங்களை பெயர்களையே கூட மறந்து போய்விட்டனர். கல்யாண ஊர்வலங்கள் நடத்தவோ, மாப்பிள்ளை குதிரையில் ஏறி ஊர்வலமாக வரவோ இவர்களுக்கு உயர் சாதியினர் யாரும் அனுமதியளிப்பதில்லை. மழைக்காலம் என்றால் நமக்கு அழகான காலமாக இருக்கும். ஆனால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கோ மிக பயங்கரமான ஒன்று. பாரம்பரியம், கலாச்சாரங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் பழைய காலங்களை அனுபவிக்க முடியாதா? கனவிலேயே ஏங்கி கொண்டிருப்போம். ஆனால் இவர்கள் ஒருபோதும் பழங்காலங்களை நினைத்து ஏங்குவதில்லை. தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா? என்பது மட்டும் தான் இவர்களின் ஒரே ஏக்கமாக உள்ளது.

மனித கழிவகற்றும் மக்கள் தெருவில் நடக்கும் போது தங்கள் முதுகில் நீண்ட துடைப்பத்தை கட்டி தொங்கவிட்டு கொண்டு போக வேண்டும் என்ற நடைமுறை முன்பு இருந்துள்ளது. அவர்கள் காலடிபட்டு களங்கப்பட்ட நிலத்தை அவர்களே பெருக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக. மேல் சாதிக்காரன் பக்கத்தில் இந்த சனங்கள் போகவே கூடாது. இந்த அவலம் அந்த காலத்தில் மட்டுமல்ல. இன்றும் கூட தான் விலங்கை விட இழிவாக நடத்தப்படுகின்றனர். நாங்கள் மலம் அள்ள வேறு சாதியினர் கோயிலில் மணியடிப்பதா என்ற கேள்வியையும் இவர்கள் கேட்க தயங்கவில்லை. குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் சாக்கடைக்குள் இறங்க வைத்து துப்புரவு தொழிலாளிகளை கொலை செய்யும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம். உழைக்க தெரிந்த இந்த மக்களுக்கு தேவை கடனுதவி அல்ல. சகமனிதர்களால் மதிக்கக்கூடிய மாற்றுத்தொழில் தான். அதோடு சக மனிதன் என்ற மரியாதையையும். சமூகத்தால் உழைப்பை மட்டும் பிடுங்கிக்கொண்டு புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியை உணர்வோடு எழுதி அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை நம் கண் முன் நிறுத்தியுள்ள எழுத்தாளர் பாஷாசிங் அவர்களுக்கு நன்றி.

2 comments:

  1. இந்தியா வல்லரசாக மாறி என்ன பயன்?

    ReplyDelete
  2. இந்தியா வல்லரசாக மாறி என்ன பயன்?

    ReplyDelete