Tuesday 14 June 2016

// // Leave a Comment

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே'!

இன்று - ஜூன் 14: சே குவேரா பிறந்தநாள்.

சே என்னை மிகவும் பாதித்த ஒரு நபர். அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று யோசிக்க வைத்த நபர். அவரின் பிறந்த நாளில் அவர் பற்றி சில விடயங்கள்

"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.

'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.

உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை, அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை. இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்" என சவாலிட்டார். 'அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.

'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது. கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.

"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்!" என்ற 'சே' மரணத்தை கண்டு அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

இப்படியான 'சே' ஒரு மருத்துவர். ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.

'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே, அவர்களது மரணமும் மர்மமானதே.

ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப் போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை. மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல, எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.

இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது. 'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது!

இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள், நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே!


ஒரு சாதாரண இளைஞனாக, அனைத்து பலவீனங்களோடும் தன் வாழ்க்கையைத் தொடங்கி, மிக உயர்ந்த லட்சியத்தின் அடையாளமாய், புரட்சி வானின் ஒளிர்மிகு நட்சத்திரங்களில் ஒருவராய் ஆனவர் சே.
சே வாழ்க்கையை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்தால் - அத்தனை குறைகளை அடுக்கி வைக்கலாம். சேவின் எதிரிகள் எழுதுவதையெல்லாம் பாருங்கள் - அவரைத் தூற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

அமெரிக்க சிஐஏ என்ற பலம்பொருந்திய வல்லூருக்கு, தன்னையே ஏன் அவன் இறையாக்கிக்கொள்ள வேண்டும்? வாழத் தெரியாதவன் என்பார்கள்.
அர்ஜன்டைனாவில் பிறந்து, மருத்துவமும் படித்த அவர், தனக்கு கிஞ்சிற்றும் தொடர்பில்லாத கியூப புரட்சிக்கு ஏன் செல்ல வேண்டும். ஒரு சுதந்திர நாட்டின் அமைச்சராக செயல்படும் அதிகாரம் கிடைத்தபோதும், மற்ற அடிமை தேசங்களை விடுவிக்கிறேன் என ஏன் புறப்பட வேண்டும். மூளையற்றவன், புகவழ் விரும்பி என்பார்கள்.

தனக்கே தனக்காக, தன்னையே நினைத்துருகி, தானே வாழ்ந்து, தானென்றே செத்துப் போகும் யாருக்கும் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான்.

என்னைப் பொருத்தமட்டில், மரணம் அல்ல வாழ்க்கைதான் நேசிப்பிற்கு உரியது. ஆனாலும், சாகும்போது இவனைப் போல் சாக வேண்டும் என்ற ஆதர்ஷத்தை ஏற்படுத்தியவர் சே குவேரா.


நாமும் 'சே'வைப் போல் இருப்போம் மனிதனாக...நல்ல தோழனாக!

எனக்கு சே வின் மொழிகள் அனைத்தும் பிடிக்கும் . அதில் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சில ..

* ‘நான்’ என்பது - எனது முக்கியானவைகளில் ஒன்று!

*“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர்எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான்கொல்லப்படுவதை பற்றி கவனம்
செலுத்தமாட்டேன்”

*நீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன்.

*”கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!”
_சே குவராவின் கடைசி வசனம்.

”புரட்சியாளர்கள்புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”

0 comments:

Post a Comment